இரசியாவில் லெனினின் சிலை குண்டு வைத்துத் தகர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 8, 2010

முன்னாள் சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் சிலை இரசியாவின் சென். பீட்டர்ஸ்பேர்க்கின் புறநகர் ஒன்றில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.


படிமம்:Leninnorilsk.jpg
உருசியாவில் உள்ள லெனின் சிலை ஒன்று

இக்குண்டுவெடிப்பினால் சிலை பெரும் சேதத்திற்குள்ளானதாகவும், அருகில் இருந்த குடிமனைகளுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


புஷ்கின் நகரில் சென்ற திங்கட்கிழமை அன்று இரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. லெனின் சிலையின் அரைப்பகுதி அளவில் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆளுநர் வலெண்டீனா மத்வியென்கோ இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். "நினைவுச் சின்னங்களின் மீது கை வைப்பவர்கள் வரலாற்றிற்கு எதிரானவர்கள் என்றும், லெனினைப் பற்றி யார் எப்படிக் கூறினாலும், தமது நகரின் குடிமக்கள் அனைவரும் இத்தாக்குதலைக் கண்டிப்பார்கள்,” என்றும் கூறினார்.


சென்ற ஆண்டு சென் பீட்டர்ஸ்பேர்கின் மத்திய பகுதியில் லெனினின் பெரிய சிலை ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்திருந்ததை நினைவூட்டிய அந்நகரின் ஆளுநர் அதே போன்றதொரு தாக்குதலே இதுவும் என அவர் கூறினார். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவரும் கைதாகவில்லை. ஆனாலும் சிலை பின்னர் மீள நிர்மாணிக்கப்பட்டது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் போல்செவிக் புரட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் பல இரசியா முழுவதும் காணப்படுகின்றன.


மூலம்=[தொகு]