உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்கத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 19, 2010

கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மோதியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 120 பேர் காயமடைந்தனர்.


இன்று மேற்கு வங்கத்தில் சாயிந்தியா என்ற தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு தொடருந்துடன் வேகமாக வந்த வேறொரு தொடருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.


விபத்து நடந்தமைக்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை.


இடிபாடுகளிடையே அகப்பட்டிருந்த பொது மக்களை அவசர மீட்புப் பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் மீட்டனர்.


இவ்விபத்து இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 0200 மணிக்கு இடம்பெற்றது. உத்தர் பங்கா விரைவு வண்டி பகல்பூர்-வனஞ்சல் விரைவு வண்டியுடம் மோதியது.


மோதிய வேகத்தில் தொடருந்துப் பெட்டிகள் சின்னாபின்னமாக சிதறிப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக விழுந்துள்ளன. சில பெட்டிகள் தொடருந்து நிலையத்தில் இருந்த நடை பாலம் மீது போய் மோதி நின்றது. பல பெட்டிகள் வாயு உடைப்பி மூலம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த நிலையில் இருந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டனர்.


இடிபாடுகளிடையே அகப்பட்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மோதிய வண்டி அந்த நிலையத்தில் நிற்க வேண்டியிருந்தாலும், அது மிகுந்த வேகத்தில் அங்கு வந்தது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.


இது இவ்வாண்டு மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய தொடருந்து விபத்தாகும்.


கடந்த மே மாதத்தில் மும்பாய் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் தொடருந்து சரக்கு வண்டியுடன் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

மூலம்

[தொகு]