மாஸ்கோவில் பூட்டினுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 25, 2011

அண்மையில் நடந்த உருசிய நாடாளுமன்றத் தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் மாஸ்கோவில் மத்திய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மாஸ்கோ ஆர்ப்பாட்டப் பேரணி, டிசம்பர் 24, 2011

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் விளாதிமிர் பூட்டினுக்கு எவரும் வாக்களிக்கப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வைத்து உறுதிமொழி பூண்டனர். ஊழல்களை இனி மேல் உருசிய மக்கள் அனுமதிக்கப்போவதில்லை என ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்த அலெக்சி நவால்னி மக்களிடையே உரையாற்றும் போது தெரிவித்தார்.


பூட்டினின் பேச்சாளர் திமீத்ரி பெஸ்கோவ் பிபிசி செய்தியாளரிடம் கூறுகையில், "பெரும்பாலானோர் பூட்டினையே ஆதரிக்கிறார்கள், ஆர்பாட்டக்காரர்கள் ஒரு மிகச் சிறுபான்மையினரே," என்றார். கிட்டத்தட்ட 56,000 பேர் வரையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் கணித்துள்ளன.


கிரெம்ளினுக்கு சில மைல்கள் தொலைவில் உள்ள சக்காரொவ் வீதியில் நேற்று சனிக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கானோர் பூட்டினுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் திரண்டனர். இதே மாதிரியான ஆர்ப்பாட்டப் பேரணிகள் நாடு முழுவது இடம்பெற்றுள்ளன. தூரகிழக்கு நகரான விளாதிவஸ்த்தோக்கில் பிரம்மாண்டமான பேரணி இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் மீண்டும் இடம்பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பூட்டினின் கட்சி இத்தேர்தலில் மிகக் குறைவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


பூட்டினின் அரசில் நிதி அமைச்சராக இருந்து அண்மையில் பதவி விலகிய அலெக்சி கூட்ரின் ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றும் போது விரைவில் மறு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]