2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு
- இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை
- இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு
- 2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு
- 2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை
- 2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
செவ்வாய், செப்டெம்பர் 11, 2012
இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் அதிகூடிய 14 இடங்களைப் பெற்று இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலாவதாக வந்தது. தமிழரசுக் கட்சி 11 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றியிருந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் படி, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 8 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தலா 4 உறுப்பினர்களும் என 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 2 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும் என 12 தமிழ் உறுப்பினர்கள் தெரிவாயினர். அம்பாறை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும் என 8 சிங்கள உறுப்பினர்கள் தெரிவாயினர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் போட்டியிட்ட 11 பேரில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். பிரதி அமைச்சர் கருணா என்ற முரளிதரனின் சகோதரி திருமதி ஞானபாஸ்கரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 22 சிங்கள உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும், ஒரு தமிழ் உறுப்பினரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 15 சிங்கள உறுப்பினர்களும், 2 முஸ்லிம் உறுப்பினர்களும், ஒரு தமிழ் உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மூலம்
[தொகு]- 11 பேரில் பிள்ளையான் மட்டுமே வெற்றி, உதயன், செப்டம்பர் 11, 2012
- கிழக்கு மாகாண சபை; 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 08 சிங்களவர்கள் தெரிவு, தினகரன், செப்டம்பர் 11, 2012