தெற்கு சூடானில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவம் வன்முறை, பன்னாட்டு மன்னிப்பகம் குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 3, 2012

தெற்கு சூடானில் இராணுவம் பொது மக்கள் மீது கொலைகள், மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


கிழக்கு ஜொங்கிலி மாநிலத்தில் ஆயுதக்க்களைவு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த மனித உரிமை அமைப்பு தெரிவிக்கிறது. இவ்வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தெற்கு சூடானிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது கேட்டுள்ளது.


இப்பிராந்தியத்தில் இராணுவத்தினர் பொது உடமைகளைக் கொள்ளையடித்தும், அழித்தும் வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஜொங்கிளி மாநிலத்தில் இடம்பெற்ற இனவன்முறைகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததை அடுத்து கடந்த மார்ச்சு மாதத்தில் தெற்கு சூடானிய அரசு இப்பகுதியில் அமைதி மீளமைப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தது.


இக்குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துள்ளது. ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும், பரவலாக எதுவும் இடம்பெறவில்லை என்றும் அரசுப் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் கூறினார்.


மூலம்[தொகு]