உள்ளடக்கத்துக்குச் செல்

குவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 8, 2012

குவாத்தமாலாவின் பசிபிக் கரையருகே மலைப்பகுதி ஒன்றில் 7.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.


நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரம் 10:35 மணிக்கு சாம்பெரிக்கோ நகரில் இருந்து 23 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவுகள் காரணமாக பல பாதைகள் நிலத்தில் மூழ்கியுள்ளன. மெக்சிக்கோவின் சான் சல்வடோர் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் அதிர்ந்தன.


73,000 பேருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் பல நில அதிர்வுகள் அங்கு இடம்பெற்றுள்ளன. சான் மார்கோசு நகரமே பெரிது பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 30 இற்கும் அதிகமான கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. சான் கிறிஸோபல் கூச்சோ என்ற நகரத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.


குவாத்தமாலாவில் 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்படுகிறது. 1976 இல் இடம்பெற்ற 7.5 நிலநடுக்கத்தில் 25,000 பேர் உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]