சர்ச்சைக்குரிய 'திவிநெகும' சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 9, 2013

சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட திவிநெகும (வாழ்வின் எழுச்சி) என்ற சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


முன்னதாக இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தினால் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 47 பிரிவுகளில் 16 இலங்கைக் குடியரசின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு முரணாக அமைந்திருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, இச்சட்டமூலம் சில திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தன. ஈபிடிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பிரபா கணேசன் ஆதரவாக வாக்களித்தார். பிரஜைகள் முன்னணி செயலாளர் சிறீரங்கா எதிர்த்து வாக்களித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுகையில், அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாகவே 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் திவிநெகும சட்டமூலம் 13வது திருத்தத்தையும் பறித்துச் செல்லும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சர் டியூ குணசேகர பேசும் போது, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எண்ணுவது தவறு என்று கூறினார்.


வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஓய்வூதியம் பெறுகின்ற அரசசேவை உத்தியோகத்தர்களாக மாற்றம் பெறுவர் என அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது கூறினார்.


மூலம்[தொகு]