ஸ்டாலின்கிராத் நகரம் போர் நினைவு நாட்களில் தனது பழைய பெயரைப் பெறவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 2, 2013

உருசியாவின் வோல்ககிராத் நகரம் உலகப் போர் நினைவு நாட்களில் மட்டும் தனது பழைய ஸ்டாலின்கிராத் என்ற பெயரைப் பெறவிருக்கின்றது.


வோல்ககிராத் நகரம்

முன்னாள் சோவியத் சர்வாதிகாரி யோசப் ஸ்டாலினுடன் தொடர்புடைய அனைத்து நினைவுச் சின்னங்களையும் நீக்குவதற்காக அப்போதைய அரசு 1961 ஆம் ஆண்டில் ஸ்டாலின்கிராத் நகரத்தின் பெயரை வோல்ககிராத் என அதிகாரபூர்வமாக மாற்றியது.


ஸ்டாலின்கிராத் சண்டை நிறைவடைந்து 70 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டிய நினைவுகூரல் நிகழ்வுகள் உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளன. ஸ்டாலின்கிராத் என்ற பெயர் சோவியத் படைகள் இச்சண்டையில் பெற்ற வெற்றிக்குத் தூண்டுகோலாக இருந்தது.


தற்போது வோல்ககிராத் நகர உள்ளூராட்சி மன்றம் ஆண்டுக்கு ஆறு நாட்கள் தனது நகரின் பெயரை "ஸ்டாலின்கிராத் சாதனையாளர் நகரம்" எனப் பயன்படுத்தவிருக்கிறது. பெப்ரவரி 2, மே 9, சூன் 22, ஆகத்து 23, செப்டம்பர் 2 மற்றும் நவம்பர் 19 ஆகியவையே அந்நாட்களாகும். இந்நாட்கள் அனைத்தும் இராணுவ வெற்றிகளை நினைவுகூரும் நாட்களாகும்.


இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றி தற்போதும் உயிருடன் இருப்பவர்கள் பலரின் வேண்டுகோளின் படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ஆனாலும், ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். ஸ்டாலினை மீண்டும் பெரும் போர்த் தலைவராக ஆக்க அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் முனைப்புக் கொண்டுள்ளார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இது அரசியல் நோக்கமுடையது என எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒலெக் மிக்கேயெவ் கூறியுள்ளார்.


ஸ்டாலின்கிராத் என்ற பெயரை நிரந்தரமாக மாற்ற வேண்டும் என இப்பிராந்தியத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோரி வருகின்றன.


கடந்த நூற்றாண்டில் இந்நகரம் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தது. த்சாரித்சின் என இருந்த ஆரம்பப் பெயர் 1925 ஆம் ஆண்டில் உருசிய உள்நாட்டுப் போரில் போல்செவிக் படைகளுக்கு ஸ்டாலின் தலைமை வகித்ததை நினைவு கூர்ந்து ஸ்டாலின்கிராத் என மாற்றப்பட்டது.


மூலம்[தொகு]