உருசியாவின் மத்திய பகுதியை எரிவிண்மீன் தாக்கியதில் 400 பேர் வரையில் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 15, 2013

உருசியாவின் மத்திய ஊரல் பகுதியை இன்று காலையில் எரிவிண்மீன் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் சேதமடைந்ததில் நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதாலேயே பலர் காயமடைந்தனர். காலை 09:20 மணியளவில் வானினூடாக எரிகோளம் ஒன்று செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் செபார்க்குல் என்ற இடத்தில் உள்ள ஏரி ஒன்றில் வீழ்ந்து பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் வீழ்ந்துள்ளதாக ரொஸ்கொஸ்மொஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எக்கத்தரின்பூர்க் நகரில் இருந்து 200 கிமீ தெற்கே செல்யாபின்ஸ்க் நகரிலேயே பெரும் தாக்கம் இடம்பெற்றுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிமீ கிழக்கே செல்யாபின்ஸ்க் நகரம் உள்ளது. இங்கு பல தொழிற்சாலைகள், ஒரு அணு மின் நிலையம், மற்றும் மயாக் அணுக் கழிவு சேமிப்பு நிலையம் போன்றவை அமைந்துள்ளன.


கீழ் வளிமண்டலத்தில் ஒரு பெரும் எரிவெள்ளி எரிந்து சிறு துண்டுகளாக வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெருமளவு நிவாரணப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


எரிவெள்ளியின் சிதறிய துண்டுகள் உருசியாவின் செல்யாபின்ஸ்க், தியூமென், கூர்கன், சுவெர்துலோவ்ஸ்க், மற்றும் அயல் நாடான கசக்ஸ்தானின் வடக்கிலும் வீழ்ந்துள்ளதாக உருசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான எரிவெள்ளிகள் பூமியில் வீழ்வது மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிவெள்ளி வீழ்ந்ததில் 2,000 சதுர கிமீ பரப்பளவு நிலம் சேதமுற்றது.


மூலம்[தொகு]