உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை: இந்திய அரசியல் கட்சிகள் கோரிக்கை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 28, 2013

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை நடத்திட ஐநா அவையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டுமென இந்திய மாநிலங்களவையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.


போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வா. மைத்ரேயன் நேற்று மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்ததையடுத்து, விவாதத்தில் வா. மைத்ரேயன் முக்கிய உரையாற்றினார். தமது உரையில் அவர், "போருக்கு பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. தமிழர்களின் வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஓர் இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் இலங்கையை நட்பு நாடு என மத்திய அரசு போற்றி வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையை நட்பு நாடாகக் கருத மாட்டோம்; அதை எதிரி நாடாகவே கருதுவோம்" என்றார்.


மைத்ரேயனைத் தொடர்ந்து டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), திருச்சி சிவா (திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர்.


இந்த விவாதத்தில் வெங்கய்ய நாயுடு (பாரதிய ஜனதா கட்சி), சஞ்சய் ரௌத் (சிவசேனை), டி. பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ்), எம். ரமேஷ் (தெலுங்கு தேசம்), நரேஷ் அகர்வால் (சமாஜவாதி கட்சி), ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), தருண் விஜய் (பாரதிய ஜனதா கட்சி), ராம் கிரிபால் யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்) ஆகிய உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]