உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் தூலா பகுதியில் நுண்வானியல் வெடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 23, 2013

உருசியாவின் மேற்குப் பகுதியில் தூலா வட்டாரத்தில் இடம்பெற்ற நுண்வானியல் வெடிப்பை அடுத்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நுண்வானியல் வெடிப்பை விளக்கும் வரைபடம். காற்று இங்கு நிலைக்குத்தாக மேலிருந்து கீழே வீசி நிலத்தைத் தாக்கி அனைத்துத் திசைகளுக்கும் பரவுகிறது. நுண்வானியல் வெடிப்பினால் ஏற்படும் காற்றின் இயக்கம் டோர்னாடோ எனப்படும் சூறைக் காற்றின் திசைக்கு எதிரானது.

நேற்று புதன்கிழமை இரவு யெஃப்ரேமொவ் நகரைத் தாக்கிய இந்த நுண்வானியல் வெடிப்பினால் (microburst) வீடுகள், மற்றும் சமூக நிலையங்கள் சேதமடைந்தன.


தூலா ஆளுனர் விளாதிமிர் குருசுதேவ் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் நகரில் அவசர நிலையைப் பிறப்பித்தார். “இதன் மூலம் நடுவண் அரசின் நிவாரண உதவிகளை பாதிப்படைந்த மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்,” என ஆளுனர் குருசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நுண்வானியல் வெடிப்பினால் பாதிப்படைந்த குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1,600 டாலர்கள் நிவாரண உதவியாகக் கொடுக்கப்படும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் படி, நுண்வானியல் வெடிப்பை அடுத்து இடம்பெற்ற சூறைக்காற்றினால், 167 வீடுகள், 29 குடியிருப்பு மனைகள், நான்கு பாடசாலைகள், இரண்டு பாலர் பள்ளிகள் ஆகியன சேதமடைந்துள்ளன. காயங்களுக்குள்ளான பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.


டோர்னாடோ எனப்படும் சூறைக்காற்றை விட வேறுபட்ட இந்த நுண்வானியல் வெடிப்பின் போது காற்று நிலைக்குத்தாக மேலிருந்து கீழே வீசி நிலத்தைத் தாக்கி அனைத்துத் திசைகளுக்கும் பரவுகிறது. இதன் மூலம் பெருமளவு சேதம் ஏற்படக்கூடும் ஆனாலும், சூறாவளி போன்று உயிர்ச்சேதம் ஏற்படும் வீரியம் குறைந்ததாகும். சென்ற திங்கட்கிழமை அமெரிக்காவின் ஓக்லகோமா நகரைத் தாக்கிய சூறாவளியினால் 24 பேர் இறந்தனர்.


மூலம்

[தொகு]