கொரிய தீபகற்பம்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என இருநாடுகளும் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 11, 2013

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் அனைத்து சர்ச்சைகளையும் தீர்த்து இருநாட்டின் உறவை மீண்டும் வலுப்படுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று வட மற்றும் தென் கொரிய அரசுகள் அறிவித்துள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் வரும் புதன், வியாழக்கிழமைகளில் தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இப்பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


2007ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் அரசுத் தரப்பிலான முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும். கடந்த பல மாதங்களாக இருநாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. மேலும், இருநாடுகளும் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தன. தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா போர்ப்பயிற்சியைத் துவங்கியதோடு, வடகொரிய கடல் எல்லையில் அதிநவீன ஆயுதக் கப்பல்களை நிறுத்தியதை, வடகொரியா எச்சரித்து வந்தது. ஆனால், வடகொரியாவை அச்சுறுத்தினால், அமெரிக்கா மீது நேரடியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இதனால், இருநாட்டு எல்லைகளிலும் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இருநாடுகளின் கூட்டு முயற்சியில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய் நிறுவனம் மூடப்பட்டது. மேலும், இருநாட்டு மக்களின் உறவும் பாதிக்கப்பட்டது.


வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே போர் மூண்டால் அது உலகிற்கே பெரும் ஆபத்தாக முடியும். மேலும், பேச்சுவார்த்தையின் மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். எனவே, இருநாடுகளும் அமைதி காக்கும்படி கியூபப் புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோ, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன், சீன அரசுத்தலைவர் ஜி ஜின்பிங் ஆகியோர் அறிவுறுத்தினர். இதனையடுத்து இருநாடுகளும் போர் ஒத்திகையை நிறுத்தியிருந்தன. இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதியன்று இருநாட்டுப் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்தது. இதனை தென்கொரியா உடனடியாக ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, தென்கொரியாவிற்கு வழங்கிவந்த உடனடித் தொடர்புச் சேவையை கடந்த ஜூன் 7ம் தேதி வடகொரியா மீண்டும் வழங்கியது.


மேலும், இருநாட்டு உறவுகளையும் மீண்டும் வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று இருநாட்டு எல்லையில் உள்ள சமாதானக் கிராமம் என்றழைக்கப்படுகிறது பன்முன்ஜம் கிராமத்தில் இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதில், தென்கொரிய ஒருங்கிணைப்புத் திட்ட அதிகாரி சுன்-ஹி-சுன் மற்றும் வடகொரியா பிரதிநிதி கிம் சாங் ஹை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளுக்கிமிடையே இருக்கும் பல முக்கியப் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.


இதனையடுத்து, திங்களன்று காலை நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன், இருநாட்டின் உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசுத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனையடுத்தே உயர்மட்டப் பேச்சுக்கள் ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகலில் ஈடுபடும் குழுவினரின் எண்ணிக்கை குறித்தே இரு தரப்பும் தற்போது முரண்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் நாளை நடைபெற மாட்டாது என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.


உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளிக்கிடையே எல்லைப் பிரச்சனை, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கீசோங் கூட்டு தொழிற்சாலை நடவடிக்கைகளை துவங்குவது, பிரிந்து கிடக்கும் குடும்பங்களை மீண்டும் இணைப்பது மற்றும் மனிதநேய அடிப்படையிலான இதர பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், தென் மற்றும் வடகொரிய கூட்டுப் பிரகடன தினம் மற்றும் 1972ம் ஆண்டு யூலை 4ம் தேதி இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கை தினங்களை கொண்டாடுவது தொடர்பாகவும் பேசவுள்ளனர். இது 2007ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதலாவது அரசு அளவிலான பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]