உள்ளடக்கத்துக்குச் செல்

செருமனியில் இருந்து சோவியத் படையினரால் திருடப்பட்ட ஓவியங்களை மெர்க்கல் பார்வையிட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 22, 2013

இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தின் படையினரால் திருடப்பட்ட ஓவியங்களை செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கெலும், உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டினும் நேற்றுப் பார்வையிட்டனர்.


சென் பீட்டர்ஸ்பூர் நகரில் உள்ள எர்மித்தாச் அருங்காட்சியகம்

உருசியாவின் சென் பீட்டர்ஸ்புர்க் நகரில் அமைந்துள்ள எர்மித்தாச் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களைத் தம்மிடம் திரும்ப ஒப்படைக்குமாறு மெர்க்கெல் கேட்டுக் கொள்வார் என செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்தன. ஆனாலும், இப்பிரச்சினை தொடர்பாக உருசியாவும், செருமனியும் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடும் என மெர்க்கெல் செய்தியாளர்களிடம் கூறினார்.


போர் ஓவியப் பிரச்சினை "மிகவும் உணர்வுபூர்வமானது" என பூட்டின் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து விவாதத்தில் ஈடுபடத் தாம் விரும்பவில்லை எனவும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பும் முயலும் என அவர் கூறினார்.


சென் பீட்டர்ஸ்பூர்க் (முன்னாளில் லெனின்கிராத்) நகரில் ஆண்டு தோறும் இடம்பெறும் பன்னாட்டு பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்கென அங்கிலா மெர்க்கெல் உருசியா வந்திருந்தார். குறிப்பிட்ட ஓவியங்கள் முதற்தடவையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதை அவர் வரவேற்றார்.


உலகப் போரின் இறுதியில் சோவியத் இராணுவம் பெர்லின் நகரை சுற்றி வளைத்து மூடியதை அடுத்து பல்லாயிரக்கணக்கான ஓவியங்களை அவர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படுகிறது. பெர்லினின் அருங்காட்சியகம் ஒன்றில் ரூபன்சு, கரவாகியோ உட்பட்ட பல ஓவியர்களின் 441 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன.


களவாடப்பட்ட ஓவியங்கள் சோவியத் செம்படையினர் சிந்திய இரத்தத்திற்காகக் கொடுக்கப்பட்ட விலை என்பதே பெரும்பாலான உருசியர்களின் கருத்து என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நெப்போலியன் உருசியா மீது படையெடுத்த போது பல உருசியப் படைப்புகள் களவாடப்பட்டதாகவும், அவை தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன எனவும் உருசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நாட்சி செருமனியினர் சோவியத் மீதான ஆக்கிரமிப்பின் போது உருசிய ஓவியங்கள் பலவற்றைத் திருடியுள்ளனர்.


மூலம்

[தொகு]