உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பில் பள்ளிவாசல் மீது பௌத்த கும்பல் தாக்குதல், 12 பேர் காயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 11, 2013

இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாலத்துறையில் சுவர்ண சைத்திய வீதியில் அமைந்துள்ள ‘மஸ்ஜிதுல் தீனுல் இசுலாம்’ என்ற பள்ளிவாசல் மீது நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெருமளவு சிறப்பு அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். நேற்று இரவு பாலத்துறை பொலிஸ் பகுதியில் 10 மணிக்கு அமுலுக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.


நூற்றுக்கும் அதிகமான பௌத்த மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று பொல்லுகள், இரும்புக் கம்பிகள், வாள்கள், தடிகளுடன் அவ்விடத்துக்கு வந்து தாக்­குதல் நடத்­தி­னர். கல்­வீச்சு மேற்கொண்டதில் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­த­ன.


கல்­வீச்சுத் தாக்­கு­த­லினால் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. காயமடைந்தவர்களில் இருவர் காவல்துறையினர் எனக் கூறப்படுகிறது. சிறப்பு அதி­ரடிப் படை­யி­னரும் காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்நிகழ்வு தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்­சாளர் புத்­திக சிறி­வர்த்­தன கூறு­கையில், கடந்த ஒரு மாத கால­மா­கவே இது தொடர்பில் இழு­ப­றி­ நி­லைமை நில­வு­வ­தா­கவும், இங்கு அமைக்­கப்­பட்ட பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரு­வ­தா­கவும் தெரி­வித்தார். இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடொன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரும் கூறிவந்தனர்.


பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அண்மைக்காலமாக பல தாக்குதல்கள் நடந்துவருவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.


மூலம்

[தொகு]