உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானியாவின் வேதாந்தா நிறுவனம் இந்திய எண்ணெய் வயல்களை வாங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 17, 2010


பிரித்தானிய சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா இந்தியாவின் ராஜத்தான் மாநிலத்தில் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளை கேன் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 8.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து வங்க முன்வந்துள்ளது.


கேன் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி நிறுவனமாகும்.


ஸ்கொட்லாந்தைத் தலைமையிடமாக கொண்ட கேன் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானில் பெரும் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிந்தது. தற்போது அந்த எண்ணெய் வயல்களிலிருந்து நாள்தோரும் ஒரு லட்சம் பீப்பாய்களுக்கும் மேலான எண்ணெய் எடுக்கப்படுகிறது.


இந்த எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும் என்று தான் நம்புவதாக வேதாந்தா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவன லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 100 பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் தலைவர் அனில் அகர்வால் ஓர் இந்தியர்.


இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு பெருமளவில் வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. இந்த தேவை வருமாண்டுகளில் மேலும் பெருகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் போக்சைட்டு கனிமம் தோண்டும் உரிமையை வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கக்கூடாது என இந்திய அரசின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


ஒரிசாவின் குறிப்பிட்ட இடத்தில் கனிமம் தோண்டுவதில் அங்குள்ல இரு பெரும் பழங்குடியினரின் உரிமைகளைப் பறிப்பதாக முடியும் என அவ்வறிக்கை கூறுகிறது.


அரசின் இறுதி முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வன வளப் பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

மூலம்

[தொகு]