உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 19, 2024

துபாயிலிருந்து சென்ற பயணிகள் வானூர்தி ஒன்று உருசியாவின் ரோசுதோவ் ஆன் டான் நகரில் விபத்துக்குள்ளானதில் 55 பயணிகளும் 7 ஊழியர்களும் பலியாகியுள்ளனர் (62).


ஃப்ளை துபாய் நிறுவனத்தின் 737-800 வானூர்தி (வானூர்தி எண் FZ981) தரையிறங்க முற்பட்டபோது ஓடுபாதையைத் தவறவிட்டதால் இந்த விபத்து நேரிட்டது.


இந்த விபத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவிட்டாலும், பனிமூட்டமும் காற்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. விமானம் தரையில் மோதி சுக்குநூறாக சிதறிப்போனது என உருசிய புலனாய்வுக் குழு தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.


முதலில் தரையிறங்க முயற்சித்து முடியாமல் போன நிலையில், இரண்டு மணி நேரம் வானத்தில் வட்டமிட்ட அந்த வானூர்தி இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோது இந்த விபத்து நேரிட்டது.


ரோசுதோவ் நகரம் மாஸ்கோவுக்கு தெற்கில் 950 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த வானூர்தியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உருசியர்கள் என பிராந்திய ஆளுனர் தெரிவித்திருக்கிறார். இறந்தவர்கள் நால்வர் குழந்தைகள். ஃப்ளை துபாய் பயணிகளில் 44 பேர் உருசியர்கள், 8 பேர் உக்ரேனியர்கள், 2 இந்தியர்கள் ஒரு உசுபெக்கிசுத்தான் நாட்டவர் இருந்தனர் எனவும் அனைவரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் எனவும் தெரிவித்தது.


வானூர்தி ஊழியர்கள் 7 பேரில் ஒருவர் உருசிய நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் வானூர்திகளை இயக்கும் ஃப்ளை துபாய் நிறுவனம் துபாயை மையமாகக் கொண்டு 2009ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 90 இடங்களுக்கு இந்த நிறுவனம் வானூர்திகளை இயக்கிவருகிறது.


மூலம்[தொகு]