கொல்கத்தாவில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்துவிழுந்ததில் 21 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 31, 2024

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்ததில் 21 பேர் வரை உயிரிழந்தனர். 80 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.


மதியம் 12.30 மணியளவில் கிரிசு பூங்கா பகுதியில் கணேசு திரையரங்கத்துக்கு அருகில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு விவேகானந்தா மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்நேரத்தில் பாலத்தின் கீழே கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.


பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அவைகளும் சேதமடைந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 காவல்துறையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.


தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை. உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது.


ராணுவத்தின் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத பழுதூக்கியுடனும் அதிநவீன கருவிகளுடனும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் இடிபாடு நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர்.


கொல்கத்தாவின் கிரிசு பூங்காவில் இருந்து அவுரா பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த பொதுவுடமை (மார்க்சியம்) ஆட்சியின்போது 2008-ம் ஆண்டில் இதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ஐதராபாதை சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். லிமிடெட் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.


ரூ.164 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை 2010 ஆகசுட்டில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பணப் பிரச்சினையால் மேம்பாலப் பணி தாமதமானது. சுமார் 5 ஆண்டுகளான நிலையில் தற்போது 76 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.


இதையடுத்து மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அண்மைகாலமாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.


மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது பயணத் திட்டங்களை முடிக்காமல் இவ்விபத்தின் காரணமாக கொல்கத்தாவுக்கு திரும்பினார்.


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


சில வாகனங்களின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஆங்காங்கே தீப்பிடித்தன. அவற்றை தீயணைப்புப் படை வீரர்கள் போராடி அணைத்தனர்.


பணியின்போது மேம்பால தூண்களில் ஒன்று நழுவி கீழே சரிந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு தூண் சரிந்து விழுந்தது. இதன்காரணமாகவே விபத்து நேரிட்டுள்ளது. ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவன மூத்த அதிகாரி கே.பி. ராவ் கட்டுமானங்களில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நேரிட்டதில்லை. இது கடவுளின் செயல் என்று தெரிவித்தார்.




மூலம்[தொகு]