உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் கூர்க்காக்களுக்கு புதிய நிருவாகப் பிரிவு, உடன்பாடு எட்டப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 19, 2011

மேற்கு வங்காளத்தின் முக்கிய சிறுபான்மை இனக்குழுவான கூர்க்காக்களுக்கு அதிக சுயாட்சி வழங்க அரசுக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சிக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.


மேற்கு வங்கத்தில் டார்ஜீலிங் மாவட்டம்

தேயிலை உற்பத்தி செய்யும் டார்ஜீலிங் மலைப்பகுதியில் நேப்பாள மொழி பேசும் கூர்க்கா இனத்தவருக்கு தனிநாடு கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி 1980களில் இருந்து போராடி வருகிறது.


மேற்கு வங்க மாநில அரசு, இந்திய நடுவண் அரசு மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி ஆகியன இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கை நேற்று சூலை 18 ஆம் நாள் இந்திய உட்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மெற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.


சில உள்ளூர் இனக்குழுக்கள் இவ்வுடன்படிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அம்ரா பென்காலி, ஜன ஜகரன் மற்றும் ஜன சேட்டனா போன்ற குழுக்கள் தனி மாநிலத்துக்குக் குறைவான எந்த ஒரு தீர்வுக்கும் தாம் உடன்படத் தயாரில்லை என அறிவித்துள்ளன.


புதிதாக உருவாக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் (Gorkhaland Territorial Administration, GTA), பொது வேலைகள், சமூக நலன்கள், சுகாதாரம், வனப்பரிபாலனம் என்பனவற்றுக்கான அதிகாரத்தைக் கொண்டதாக இருக்கும். 50 உறுப்பினர்கள் இந்நிர்வாகத்தில் இடம்பெறுவர். இந்த உடன்படிக்கையானது டார்ஜிலிங் மலைப்பகுதியில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்திக்கு வழியமைக்கும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


இந்த நிருவாகப் பிரிவு எமது நீண்ட காலக் கோரிக்கையான தனி மாநிலத்துக்கான முதற்படி என ஜனமுக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.


மூலம்[தொகு]