உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாவது நீதிமன்றமும் சரத் பொன்சேகா குற்றவாளியெனத் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 18, 2010

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.


இந்த தீர்ப்பு இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டு இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. அதில் முதலாவது நீதிமன்ற விசாரணையில் அவர் இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் சம்பந்தப்பட்டதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அவர் ஏற்கனவே குற்றங்காணப்பட்ட நிலையில் சென்ற மாதம் அவரது பதவிகள் அனைத்தும் அவர் வசம் இருந்து பறிக்கப்பட்டு ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டதாக முதலாவது நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது பின்னர் அரசுத்தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.


இராணுவ நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக அவரது வக்கீல் சுனில் வட்டகல பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]