இலங்கை தேர்தல் வன்முறையில் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 14, 2010


கிழக்கிலங்கையின் பொலன்னறுவை நகரில் பணிபுரியும் பிபிசி சிங்கள சேவையின் பெண் செய்தியாளர் தக்சிலா தில்ருக்சி ஜெயசேனா, தேர்தல் பிரச்சார மோதல் பற்றி செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.


இந்த நிகழ்வு குறித்து செய்தியை சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் தக்சிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக செய்திகள் கூறின. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு போலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின. இவ்வன்முறையின் போது பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறையாளர்களை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை காவல்துறையினர் வீசீனர்.


சனவரி 26 இல் நடைபெறும் அதிபர் தேர்தலை ஒட்டி அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வன்முறை நிறைந்ததாக மாறிவருவதாக சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் கூறினர். செவ்வாயன்று சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பக்கமே பல குற்றச்சாட்டுக்களை கண்காணிப்பாளர்கள் சுமத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலண்ட் தெரிவித்தார்.


வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் அதிபருக்கு ஆதரவான பிரச்சாரங்களில் கலந்து கொள்ளவென இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் அனவும் அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்; அதிபரின் உத்தரவிற்கிணங்க தனியார் செல் தொலைபேசி நிறுவனங்கள் அதிபருக்கு ஆதரவாக குறுஞ்செய்திகளை தமது வாடிக்கையாளருக்கு அனுப்பி வருகின்றனர்.


வடக்கில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட தமிழர்கள் வாக்களிக்க முடியாதுள்ளதாகவும் கண்காணிப்பாளர்கள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர்.

மூலம்[தொகு]