உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கில் சியா முசுலிம்கள் 22 பேர் சுட்டுக்கொலை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 14, 2011

ஈராக்கில் உள்ள மேற்கு பாக்தாதில் சிரியா நோக்கிச் சென்ற பேருந்தில் வந்த 22 பேரை ஆயுதம் தாங்கிய மனிதர்கள் சுட்டுக் கொன்றனர். திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர்.


சிரியாவில் உள்ள ஒரு இசுலாமியத் தலத்தைத் தரிசிக்கவென இவர்கள் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 8 பெண்கள் உட்பட 30 பேர் இப்பேருந்தில் பயணம் செய்தனர். அந்த பேருந்து திங்கள் இரவு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள நௌகைர் பாலைவனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆயுதம் தாங்கிய சிலர் பேருந்தை வழிமறித்து அதில் இருந்த பெண்களை இறக்கி விட்டு ஆண்களை வேறோர் இடத்துக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக ஈராக்கியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஈராக்கிய இராணுவத்தினர் பாதையோரம் நின்றிருந்த பெண்கள் அனைவரையும் மீட்டு வந்தனர். பயணிகள் அனைவரும் கர்பாலா நகரைச் சேர்ந்தவர்கள்.


கடந்த சில மாதங்களில் சியா முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ஈராக்கில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]