ஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 16, 2012

ஈராக்கின் பாஸ்ரா நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மத நிகழ்ச்சியொன்றில் மனிதக்குண்டு ஒன்று வெடித்ததில் 53 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.


பாஸ்ரா புறநகர் பகுதியில் உள்ள இமாம் அலி புனிதத் தலத்துக்கு ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டுகளுடன் கூட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதி, அங்குள்ள காவல் சோதனைச் சாவடி அருகே குண்டை வெடிக்க வைத்தமையினாலே மேற்படி இழப்புகள் ஏற்பட்டன


ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரசை வீழ்த்திய பிறகு, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க படைகள் தொடர்ந்து காவலில் ஈடுபட்டு வந்தன. அதன்பின், படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்த படையின் கடைசி குழுவினர் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா திரும்பினர்.


ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் 60 சதவீதம் பேரும், சுன்னி முஸ்லிம்கள் 40 சதவீதம் பேரும் உள்ளனர். சுன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேனின் ஆட்சி முடிவுற்றப் பின்னர், அந்த நாட்டு அரசியலில் ஷியா பிரிவுத் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இமாம் உசேன் போரில் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கர்பாலா மற்றும் பாஸ்ரா பகுதிகளில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சன்னி பிரிவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


கடந்த வாரம் பாக்தாதில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 78 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]