ஈராக்: தொடர் குண்டுவெடிப்புகளில் 60 பேர் உயிரிழப்பு
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 11 செப்டெம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு
- 23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது
- 5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு
- 22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்
புதன், சூன் 12, 2013
ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 191 பேர் காயம் அடைந்தனர்.
ஈராக் நாட்டில் கார் குண்டுவெடிப்பு என்பது தினசரி நிகழ்வாகி விட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், காவல்துறையினரும், இராணுவத்தினரும் உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் திங்களன்று ஈராக்கின் பல பகுதிகளில் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டது.
தலைநகர் பாக்தாதில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோசூல் என்ற நகரில் 5 இடங்களில் கார் குண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி அப்பாவி மக்கள் 25 பேர் இறந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து மோசூல் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் துஸ் குர்மத் நகரில் திங்கட்கிழமை கார்க்குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயம் அடைந்தனர்.
கிர்குக் நகரில் இராணுவ முகாமைத் தகர்க்கும் நோக்கில் குண்டு வைத்து வெடிக்க செய்ததில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். 12 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் திக்ரித் நகரில் ராணுவ சோதனைச் சாவடியை நோக்கி காரில் வந்த மர்ம நபர் தானியங்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 10 பேர் வீரர்கள் காயமடைந்தனர். தஜி நகரில் உள்ள மொத்த மீன் சந்தைப் பகுதியில் கார்க்குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் திங்கட்கிழமை அதிகாலை பகுபா நகரில் உள்ள காய்கறிச் சந்தையில் கார்க்குண்டு வெடித்ததில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 39 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இந்த குண்டு வெடிப்புகள் பின்னணியில் அல்-கைதா அமைப்பு இருக்கலாம் என்று ஈராக் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
மூலம்
[தொகு]- Iraq hit by wave of bomb attacks, killing dozens, கோர்ட்டெசு ஜர்னல், சூன் 10, 2013
- Scores killed in Iraq car bombings, அல்ஜசீரா, யூன் 11, 2013