உகாண்டாவில் நிலச்சரிவு, நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 3, 2010


உகண்டாவின் மலைப்பகுதியான புடுடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அமைச்சரான முசா எக்வெரி அவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளார்.


முந்நூறுக்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 60 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். இவர்கள் அங்குள்ள ஒரு மருத்துவ மையம் ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னிரவில் இம்மையம் சேதமடைந்தது.


கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வணிக மையத்தை முற்றாக தரைமட்டமாக்கி, கடைகளையும், வீடுகளையும், ஏனைய கட்டிடங்களையும் புதையச் செய்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.


தான் ஒரு தேவாலயத்தில் தங்கியிருக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டது என உயிர் தப்பியவர்களில் ஒருவர் கூறினார். "தேவாலயம் திடீரென இடிந்து வீழ்ந்தது. அனைத்துப் பகுதியையும் சேறு சூழ்ந்து கொண்டது. எனக்கருகில் நின்றிருந்த ஐந்து பேர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன்.சேற்றிற்கு மேலே என் தலைப்பகுதி இருந்ததால் நான் உயிர் தப்பினேன்," என்றார் அவர்.


உயிர் தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறார்கள்.


பாதிக்கப்பட்ட பகுதி தலைநகர் கம்பாலாவில் இருந்து 275 கிமீ வடகிழக்கே அமைந்துள்ளது. இப்பகுதியில் நிலச்சரிவு சாதாரணமான நிகழ்வு என்றும், உயிர்ச்சேதங்களும் அதிகம் எனவும் பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

மூலம்