உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் சோயுஸ் டிஎம்ஏ-05எம் விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 15, 2012

உருசியாவின் விண்கலம் ஒன்று மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்பட்டது.


யூரி மலென்ச்சியென்கோ, சுனித்தியா வில்லியம்சு, அக்கிஹிக்கோ ஓசிது

கசகத்தானில் உள்ள பைக்கனூர் ஏவுமையத்தில் இருந்து சோயுசு டிஎம்ஏ-05எம் விண்கலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரம் காலை 06:40 மணிக்கு உருசிய, சப்பானிய, மற்றும் அமெரிக்க வீரர்களுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது. இவ்விண்கலம் செவ்வாய்க்கிழமை அன்று மாஸ்கோ நேரம் காலை 08:52 மணிக்கு பூமியில் இருந்து 385 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உருசியாவின் யூரி மலென்ச்சியென்கோ (அகவை 50), நாசாவின் சுனித்தியா வில்லியம்சு, மற்றும் சப்பானின் அக்கிஹிக்கோ ஓசிது ஆகியோர் விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள நாசாவின் யோசப் அக்காபா, உருசியாவின் கெனாடி பதல்க்கா மற்றும் செர்கே ரேவின் ஆகிய மூவருடன் இணைவர்.


விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் போது இவர்கள் 30 பரிசோதனைத் திட்டங்களை நடத்துவர். யூரி மலென்ச்சியென்கோவிற்கு இது ஐந்தாவது மிக நீண்ட விண்வெளிப் பயணம் ஆகும். ஏனைய இருவரும் தலா ஒரு தடவை நாசாவின் விண்ணோடத் திட்டத்தில் விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளனர்.


அடுத்த வாரம் சப்பானின் சரக்கு கப்பல் ஒன்றும் விண்வெளி நிலையத்துடன் இணையவிருக்கிறது. மேலும் எட்டு விண்கலங்கள் விரைவில் விண்வெளி நிலையத்துடன் இணையவுள்ளன.


2011 சூலை மாதத்தில் நாசா தனது விண்ணோடத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததை அடுத்து தனது வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கு குறைந்தது 2015 ஆம் ஆண்டு வரையில் உருசிய விண்கலங்களையே அமெரிக்கா நம்பியுள்ளது.


மூலம்

[தொகு]