உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவில் காட்டுத்தீ பரவியதில் 23 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 31, 2010


உருசியாவின் மத்திய பகுதியில் கடும் வெப்பம் காரணமாக அங்குள்ள் பெரும்பாலான பகுதிகளில் காட்டுத்தீ பரவியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 2000 பேருக்கு மேல் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த உதவுமாறு நாட்டின் ஆயுதப்படையினரை அரசுத்தலைவர் திமீத்ரி மெட்வேடெவ் கேட்டுக் கொண்டுள்ளார்.


வொல்கா என்ற ஊருக்கு பிரதமர் விளாதிமிர் பூட்டின் சென்று சேதங்களைப் பார்வையிட்டார். அங்குள்ள அனைத்து 341 வீடுகளும் தீயில் எரிந்து சேதம்மாகியுள்ளன. சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 200,000 ரூபிள்கள் (£4,200) வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். "அனைத்து வீடுகளும் அடுத்த குளிர்காலத்துக்கு முன்னர் மீளக் கட்டித்தரப்படும்," என அவர் தெரிவித்தார்.


கடந்த வியாழனன்று 39C (102F) வெப்பநிலையாக இருந்த தலைநகர் மொஸ்கோவில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் சூழல் மாசு வழமையானதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தலைநகர்ப் பகுதியில் மஸ்கோவயே என்ற ஊரில் மீட்புப்பணியாளர் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.


இரசியாவில் ஒரு நூற்றாண்டில் என்றுமில்லாத வரண்ட காலநிலை அங்கு நிலவுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்

[தொகு]