உள்ளடக்கத்துக்குச் செல்

உருசிய விமான விபத்தில் பனி வளைதடியாட்டக் குழுவினர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 8, 2011

உருசியாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் லோக்கோமோட்டிவ் யாரொசிலாவில் என்ற முன்னணி பனி வளைதடியாட்ட (ice hockey) அணியின் 36 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.


உருசிய அரசுத்தலைவர் மெட்வெடெவ் விபத்து நடந்த இடத்தில் மலரஞ்சலி செலுத்துகிறார்.

"இது எமது விளையாட்டின் இருண்ட நாள்" என உலகப் பனி வளைதடியாட்டத் தலைவர் ரெனே ஃபேசெல் தெரிவித்தார்.


நேற்று புதன்கிழமை யாரொசிலாவில் நகரின் துனோஷ்னா விமான நிலையத்தில் இருந்து யாக்-42 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிட நேரத்தில் மாலை 1605 மணி நேரத்தில் வெடித்துச் சிதறியது. உருசிய மற்றும் ஐரோப்பிய விளையாட்டு வீரர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர். இருவர் எரிகாயங்களுடன் உயிர் தப்பினர். பெலருசில் தனது முதலாவது விளையாட்டை ஆடுவதற்காக இவ்வணியினர் சென்று கொண்டிருந்தனர்.


விமானத்தில் இருந்த அனைத்து 11 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் உயிரிழந்தனர். இவர்களில் அணியின் கனேடியப் பயிற்சியாளர் பிராட் மெக்கிரிமன், சுவீடனின் வீரர் ஸ்டெபான் லீவ், மற்றும் பெலருஸ், செக் குடியரசு, செருமனி, லாத்வியா, சிலொவாக்கியா, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர். 35 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விபத்துக்கான காரணம் தெரியவில்லை, ஆனாலும் விமானம் வானொலிக் கொடிக்கம்பம் ஒன்றுடன் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூர் விமான சேவைகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க உத்தரவிட்டுள்ள அரசுத்தலைவர் திமீத்ரி மெட்வெடெவ், விமானப் பயணப் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களை வாங்கப்படலாம் எனத் தெரிவித்தார். நேற்றைய விமான விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், "அரசாங்கம் கடுமையான சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது," எனக் கூறினார்.


யாரொசிலாவில் நகரம் மாஸ்கோவில் இருந்து வடகிழக்கே 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


மூலம்

[தொகு]