ஏவுகணை இரகசியங்களை அமெரிக்காவுக்கு விற்ற உருசியருக்கு சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, பெப்ரவரி 11, 2012

அமெரிக்காவின் உளவுத்துறைக்கு உருசிய ஏவுகணைத் திட்டத் தரவுகளை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட உருசியாவின் பிளெசெத்ஸ்க் விண்வெளி மையத்தின் பொறியியலாளருக்கு 13 ஆண்டு காலச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது


பிளெசெத்ஸ்க் ஏவுதளம்

விண்வெளி மையத்தின் மூத்த அதிகாரியான லெப். கேணல் விளாதிமிர் நெஸ்தெரெத்ஸ் என்பவரே குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதாக உருசியாவின் இரகசியப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. உருசியா அண்மைக்காலத்தில் நிகழ்த்திய எவுகணைச் சோதனைத் திட்டங்களின் முடிவுகளை தாம் அமெரிக்காவுக்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமது கணவர் தாம் குற்றமற்றவர் எனத் தமக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாக அவரது மனைவி ரியாநோவஸ்தி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.


உருசியாவின் அண்மைக்கால ஏவுகணைத் திட்டங்கள் பல தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டுள்ளது. ஆர்க்ட்டிக் வட்டத்தில் வட-மேற்கு உருசியாவில் ஆர்க்காங்கெல்சிக் ஓபலாசுத்துவில் அமைந்துள்ள பிளெசெத்ஸ்க் விண்வெளி மையம் உருசிய இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிருந்து பொதுவாக செயற்கைக்கோள்கள், மற்றும் ஏவுகணைகள் விண்ணுக்குச் செலுத்தப்படுவது வழக்கம்.


கடந்த ஆண்டில் 199 வெளிநாட்டு உளவாளிகள் தம்மிடம் பிடிபட்டுள்ளதாக உருசியாவின் அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வெடெவ் அண்மையில் அறிவித்திருந்தார். இவர்களில் சிலர் மேற்கத்தைய நிறுவனங்களில் பணிபுரியும் உருசியர்கள் என அவர் கூறினார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg