உள்ளடக்கத்துக்குச் செல்

ஐவரி கோஸ்டில் எதிர்க்கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றதாக உலக நாடுகள் கருத்து

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 4, 2010

ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அலசானி ஊட்டாரா வெற்றி பெற்றதை உலக நாடுகள் பல வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் சட்டசபை தற்போதைய அரசுத்தலைவர் லோரண்ட் குபாக்போ வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அவர் இரண்டாம் தடவையும் தலவராகத் தயாராகிறார் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


குபாக்போ தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா, ஐநா, பிரான்ஸ் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியன கேட்டுள்ளன.


2002 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற இத்தேர்தல் நாட்டை ஒன்றுபட வைக்க உதவும் நம்பப்பட்டது. உண்மையான முடிவுகளை மாற்றுவது நாட்டின் திரத்தன்மையில் மேலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதமர் கிலோமி சோரோ எச்சரித்திருக்கிறார்.


எதிர்க்கட்சி வேட்பாளர் ஊட்டாரா 54.1% வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக சுதந்திரத் தேர்தல் ஆணையம் கடந்த வியாழன் அன்று அறிவித்திருந்தது.


ஆனாலும் குபாக்போவும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து நாட்டின் சட்டசபை தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்துச் செய்தது. குபாக்போ 51% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக சட்டசபையின் தலைவர் அறிவித்தார்.


ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள 10,000 பேரடங்கிய ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே அமைதிப்படையினரின் பக்கம் இப்போது அனைவரதும் பார்வை திரும்பியுள்ளது.


எதிர்க்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டனர். டயர்களை எரித்தும், கற்களை வீசியும் வன்முறைகளில் ஈடுபட்டனர். நாட்டின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தினரும், அமைதிப்படையினரும் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அபிஜான் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர்.


மூலம்

[தொகு]