ஐவரி கோஸ்ட்: அரசுத்தலைவர் மாளிகைக்கு அருகில் பெரும் சண்டை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 1, 2011

ஐக்கிய நாடுகளினாலும், பல உலக நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் தலைவர் அலசானி ஓட்டாராவுக்கு விசுவாசமான படைகள் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் லோரெண்ட் குபாக்போவின் படைகள் மீது பெரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தலைநகர் அபிஜானில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையின் மீது ஓட்டாராவின் படைகள் தாக்குதல் நடத்தினர். நகரில் நிலவும் பதற்ற சூநிலையை அடுத்து நகரில் இருந்த 500 வெளிநாட்டவர்களை பிரெஞ்சு இரணுவத்தினர் பாதுகாப்பாக இராணுவ நிலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபிஜானின் பன்னாட்டு விமான நிலையம் ஐக்கிய நாடுகளினதும், பிரெஞ்சு இராணுவத்தினரினதும் கட்டுப்பாட்டில் உள்ளது.


லோரெண்ட் குபாக்போவுக்கு இது கடைசி மணித்துளிகள் என அங்குள்ள நிலை குறித்துக் கருத்துக்கூறிய பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கடந்த பல வாரங்களாக அரசுத்தலைவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது அரசு மாளிகையில் தங்கியுள்ளாரா எனவும் தெரியவில்லை.


"க்பாக்போ ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிரார்கள். எனவே அவர் ஆட்சியில் இருந்து அகலப்போவதில்லை," அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஐவரி கோஸ்டின் எல்லைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஓட்டாராவின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இரவுநேர ஊரடக்கும் அங்கு அமுலில் உள்ளதாக அது அறிவித்துள்ளது.


நவம்பர் தேர்தலில் தோல்வியுற்ற குபாக்போ தனது பதவியை ஓட்டாராவுக்குத் தருவதற்கு மறுத்து வருகிறார். ஓட்டாராவின் படைகள் தற்போது நாட்டின் 80 வீதமான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]