உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசாமா பின் லாடன் கொலைப் படங்களை வெளியிடுவதில்லை என அமெரிக்கா முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 6, 2011

கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட அல்-கைடா தலைவர் ஒசாமா பின் லாடனின் சடலத்தின் புகைப்படங்க்களை வெளியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.


கொடுரமான நிலையில் இருக்கும் சடலத்தைக் காட்டும் இந்தப் புகைப்படங்கள் வன்செயல்களைத் தூண்டலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு, அமெரிக்காவில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.


தங்களிடமுள்ள புகைப்படத்தில் இருப்பது ஒசாமா தான் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் டி.என்.ஏ மாதிரியின் சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்டிருப்பதால் பின் லாடனைக் கொன்றுவிட்டோம் என்பதில் தங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்றும் ஒபாமா தெரிவித்திருக்கிறார். அதேசமயம் தலையில் சுடப்பட்ட ஒருவரது சடலத்தின் கொடூரமான காட்சியை அப்பட்டமாகக் காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என்பது ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ள ஒபாமா, அதனை யாராவது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டால், அதனால் வன்செயல்கள் தூண்டப்படலாம் என்பதனையும் தாங்கள் கருத்தில் கொண்டதால் தான் அந்த புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.


நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் ரூடி ஜூலானி கருத்துத் தெரிவிக்கையில், "என்றோ ஒருநாள் இந்த புகைப்படங்கள் எப்படியாவது வெளிவரத்தான் செய்யும். அப்படிப்பட்ட நிலையில் அவற்றை இப்போதே வெளியிடுவதுதான் சரி," என்று தெரிவித்திருக்கிறார். "இப்போது இந்தப் புகைப்படங்களை வெளியிட்டால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அதன் தீவிரம் குறைந்து போகும் என்றும், இவற்றை வெளியிடுவதன்மூலம் பின் லாடனின் அடையாளத்தை உறுதிப்படுத்த நினைக்கும் ஆட்களையாவது திருப்திப்படுத்த முடியும். உடனடியாக இது ஆபத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட கால அளவில் பிரச்சினை தீர்ந்துவிடும்," என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


குடியரசுக் கட்சித் தலைவரும், அமெரிக்க செனட்டருமான லின்ட்சி கிரகாம் கூறியதாவது: "ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டார் என்பது எனக்கும் தெரியும். பின்லாடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின், அந்த இடத்தின் மீது, குண்டுவீசித் தாக்குதல் நடத்தாமல், கமாண்டோ படையினரை அனுப்பி, தாக்குதல் நடத்தப்பட்டது. பின்லாடன் மரணம் அடைந்தாரா, இல்லையா என்ற சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே. பின்லாடனின் மரணத்தை, உலக நாடுகளுக்கு, எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். அதிபரின் இந்த முடிவின் மூலம், பின்லாடன் இறந்தாரா, இல்லையா என்ற விவாதம் நீண்ட நாட்களுக்கும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.


அதே நேரம் அமெரிக்கப்படையின் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மூன்று ஆண்களின் உடல்களின் புகைப்படத்தை ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.


இதேவேளை அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் - பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]