கம்போடியாவின் முன்னாள் கெமரூச் சிறை அதிகாரிக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை
- 5 சூன் 2014: பண்டைய இந்து சிற்பங்கள் கம்போடியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டன
- 12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- 15 அக்டோபர் 2012: கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்
- 30 மார்ச்சு 2012: கம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
- 6 மார்ச்சு 2012: கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது
வெள்ளி, பெப்பிரவரி 3, 2012
கெமரூச் சிறை அதிகாரியாக இருந்த காயிங் கெக் இயேவ் (டூச்) என்பவரின் மேன்முறையீட்டை நிராகரித்த ஐநா ஆதரவுடன் இயங்கும் கம்போடிய நீதிமன்றம் அவருக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக அதிகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கெமரூச்சின் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரைச் சிறையில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கிப் படுகொலை செய்தாரென இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டில் 35 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தான் அப்போது இளநிலை அதிகாரியாகவே இருந்தார் எனவும் மேலதிகாரிகளின் உத்தரவையே தாம் நிறைவேற்றியதாகவும் அவர் மேன்முறையீடு செய்தார். இவரது மனுவை நிராகரித்த நீதிபதிகள் அவரது தண்டனைக்காலத்தையும் அதிகரித்தனர்.
69-வயதான டூச் 1975-1979 காலப்பகுதியில் துவோல் சிலெங்கு சிறைச்சாலை அதிகாரியாகப் பணியாற்றியவர். இச்சிறையில் குறைந்தது 15,000 ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் எனக் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னர் வழங்கப்பட்ட 35 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை போதாது என அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். "காயிங் கெக் இயேவ் செய்த குற்றம் மனிதகுல வரலாற்றில் மிகவும் மன்னிக்க முடியாதது, இவர்களுக்கு அதிக பட்சத் தண்டனையே வழங்கப்பட வேண்டும்," என நீதிபதி கொங் சிரிம் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
படுகொலைகளில் இருந்து உயிர் தப்பியவர்களும் அவர்களது உறவினர்களுமாக நூற்றுக்க்கணக்கானோர் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர். கெமரூச்சின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த நுவோன் சியா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் இயெங் சாரி, அவரது மனைவி இயெங் திரித் ஆகியோர் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மூலம்
[தொகு]- Life term for Cambodia Khmer Rouge jailer Duch, பிபிசி, பெப்ரவரி 3, 2012
- Khmer Rouge jailer handed life on appeal, பாங்கொக் போஸ்ட், பெப்ரவரி 3, 2012