உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடியாவில் திருவிழா நெரிசலில் சிக்கி 345 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 23, 2010

கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் நகரில் இடம்பெற்ற வருடாந்த சமயத் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி குறைந்தது 345 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 400 பேர் காயமடைந்தனர்.


மழைக்காலத்தை ஒட்டி ஆண்டுதோறும் இடம்பெறும் இத்திருவிழாவைத் தண்ணீர்த் திருவிழா என அழைப்பர். மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழாவின் கடைசி நாளான நேற்று திங்கட்கிழமை அன்றே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக பாலம் ஒன்றில் குழுமியிருந்த மக்களே நெரிசலில் சிக்கினர்.


1970களின் இனப்படுகொலைகளை அடுத்து கம்போடியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய அனர்த்தம் இதுவாகும் என அந்நாட்டின் பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். நாளை கம்போடியாவில் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று நாள் விழாக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


டயமண்ட் தீவில் இடம்பெற்ற களியாட்ட விழாவை அடுத்து டொன்லே சாப் ஆற்றில் இடம்பெற்ற படகுப் போட்டியைப் பார்ப்பதற்காக பாலத்தின் மீது மக்கள் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


"பாலத்தின் மீது அளவுக்கும் அதிகமானோர் நின்றிருந்தனர் என்றும் இரு பக்கத்திலிருந்தும் நடுப்பக்கத்தை நோக்கி மக்கல் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்டனர்," என ஆத்திரேலியாவில் இருந்து சென்ற சோன் நியூ என்பவர் பிபிசிக்குத் தெரிவித்தார். மின்சாரக் கம்பி அறுந்ததனால் பலர் மின் தாக்குதலுக்குள்ளாயினர் என அவர் கூறினார்.


"மக்கள் அச்சம் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்தனர். பலர் பாலத்தில் இருந்து ஆற்றினுள் பாய்ந்தனர். சிலர் பாலத்தின் மீது ஏறி, மின்சாரக் கம்பிகளில் தொங்கியுள்ளனர் என்றும் அதனால் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலர் இறந்தனர்.


இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் ஆவர். காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


மூலம்[தொகு]