குவாத்தமாலாவின் முன்னாள் தலைவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 18, 2010

ஐக்கிய அமெரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் குவாத்தமாலாவின் முன்னாள் அரசுத்தலைவர் அல்பொன்சோ போர்ட்டிலோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சிறுவர் நிதியம், மற்றும் அரசு நிதிகளை மோசடி செய்ததாக அமெரிக்கா அல்போன்சோ மீது குற்றம் சாட்டியதை அடுத்து அவர் ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார்.


அன்றிலிருந்து அவர் குவாத்தமாலா நகரில் அதிபாதுகாப்பு சிறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.


58 வயதான போர்ட்டிலோ இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


2004 ஆம் ஆண்டில் பதவி இழந்தவுடன் அவர் மெக்சிக்கோவுக்குத் தப்பி ஓடினார். ஆனாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டதை அடுத்து 2008 ஆம் ஆண்டில் அவர் குவாத்தமாலாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.


"முன்னாள் அரசுத்தலைவர் மில்லியன் கணக்கான பொதுப்பணத்தை மோசடி செய்து அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிட்டிருந்தார்" என நியூயோர்க் நீதிமன்றம் ஒன்று பெப்ரவரியில் தெரிவித்திருந்தது. அத்துடன் குவாத்தமாலாவின் பாதுகாப்புத் துறையில் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கையாடியது தொடர்பாக குவாத்தமாலா அரசு அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

மூலம்[தொகு]