குவாத்தமாலாவில் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

தென்னமெரிக்க நாடான குவாத்தமாலாவில் மூன்று மணித்தியாலங்களுக்குள் நான்கு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


அதிகூடிய நிலநடுக்கத்தின் அளவு 5.8 ஆக அளவிடப்பட்டுள்ளது. குவாத்தமாலா நகரில் இருந்து 50 கிமீ தென்கிழக்கே இவை மையம் கொண்டிருந்தாலும், நாட்டின் பல இடங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. திங்களன்று இரவு பொதுமக்கள் பலரும் அச்சத்தினால் வீதிகளிலேயே தமது இரவுப் பொழுதைக் கழித்தனர்.


மக்களை அமைதி பேணும்படி அறிவித்த குவாத்தமாலா அரசுத்தலைவர் அல்வேரோ கொலொம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 திங்கள் நண்பகலில் பதியப்பட்டது. 30 நிமிடங்களின் பின்னர் 5.8 அளவு நிலநடுக்கமும், பின்னர் இரண்டு சிறிய நடுக்கங்களும் பதியப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


குயிலாப்பா என்ற இடத்தில் மூவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் வாகனம் ஒன்று புதையுண்டதால் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சாலைகளில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. எல் சல்வடோருக்குச் செல்லும் நெடுஞ்சாலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]