கொங்கோ எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, ஜனவரி 27, 2012

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் எதிர்க்கட்சித் தலைவர் எத்தியேன் த்சிசெக்கேடிக்கு ஆதரவாகத் தலைநகர் கின்சாசாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்தனர். தம்மை அரசுத்தலைவர் மாளிகைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு திரு. த்சிசெக்கேடி தனது ஆதரவாலர்களை முன்னதாகக் கேட்டுக் கொண்டார்.


கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதெனக் கூறியுள்ள அவர் தானே அந்நாட்டின் சனாதிபதி என அறிவித்திருந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


அரசுத்தலைவர் ஜோசப் கபிலா நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், இத்தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் அரசுத்தலைவராக சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.


நேற்று வியாழன் அன்று அவரும் அவரது கட்சி ஆதரவாளர்களும் அரசுத்தலைவர் மாளிகைக்கு செல்ல எடுத்த முயற்சியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கொங்கோவில் பல ஆண்டுகளாக இடம்பெற்று 2003 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் சிக்கி நான்கு மில்லியன் மக்கள் வரையில் உயிரிழந்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அரசுத்தலைவர் ஜோசப் கபிலாவின் பங்களிப்பு அங்கு பெரிதளவில் பேசப்படுகிறது. 40 வயதாகும் கபிலா 2001 ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் அரசுத்தலைவராக இருந்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இடம்பெற்ற முதலாவது தேர்தலில் வெற்றி பெற்ற அவர் சென்ற ஆண்டுத் தேர்தலில் இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg