சீன நாணயத்திற்கு எதிரான சட்டமுன்வரைவு அமெரிக்க மேலவையில் நிறைவேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 13, 2011

சீனா தனது யுவான் நாணயத்தின் மதிப்பை உயர்த்த வழிசெய்யும் சட்டமுன்வரைவு (மசோதா) ஒன்றினை அமெரிக்க மேலவை (செனட்) நேற்று நிறைவேற்றியுள்ளது.


அமெரிக்க டாலருக்கு எதிராக வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதற்காக, தங்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது, அமெரிக்கா வரி விதிக்க வழி செய்யும் நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சனநாயகவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள செனட் சபையில் 63-35 என்ற அடிப்படையில் இம்முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.


சீனா தனது 'யுவான்' நாணயத்தை, டாலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால், சீன ஏற்றுமதியாளர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் எனவும், அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையிலே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க வேலையில்லா திண்டாட்டத்திற்கு தனது நாணய மதிப்பு காரணமல்ல எனவும், 2005 முதல் இதுவரை, யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வந்தது.


இம்மசோதா, பிரதிநிதிகள் சபையில் (கீழவை) நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பாய்னர், 'இம்மசோதாவை நான் வாக்கெடுப்புக்கு விடப் போவதில்லை எனவும் இதனால், பொருளாதார நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்படும்' என்றும் தெரிவித்துள்ளார். இம்மசோதாவை எதிர்க்கும் நிபுணர்கள், சீனப் பொருட்களின் மீதான வரி அதிகரிப்பால், வியட்நாம், மலேசியா போன்றவை தான் பயனடையும்; அமெரிக்கா அல்ல என்றும், அப்படியே சீனப் பொருட்களின் விலை அதிகரித்தால், அமெரிக்க குடும்பங்களையும் தொழில்களையும் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.


மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதுபோன்ற நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கிடையில் வணிகப் போரைத் தான் உருவாக்கும் என எச்சரித்துள்ளது. அதிபர் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]