உள்ளடக்கத்துக்குச் செல்

சூடானின் பாதுகாப்பு அமைச்சருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 2, 2012

தார்பூரில் மனித உரிமை மீறல் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடானின் பாதுகாப்பு அமைச்சர் அப்தல்ரகீம் உசைனுக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.


இவருக்கு எதிரான 20 மனித உரிமை மீறல் குற்றங்களும், 21 போர்க்குற்றங்களும் இவரை கைது செய்தவதற்குப் போதியவையாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நெதர்லாந்தின் த எக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தது.


ஆகத்து 2003 முதல் மார்ச் 20004 வரை சூடானின் தார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு திரு. உசைனே முக்கிய பங்காற்றியவர் என பன்னாட்டு நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் பூயிசு மொரேனோ-ஒக்காம்போ கூறியுள்ளார்.


தார்பூரின் கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளை முக்கியமாக அரபு ஜஞ்சாவீது என்ற துணை இராணுவக் குழுவே முன்னின்று நடத்தியிருந்தது. சூடானிய இராணுவம் கறுப்பினத்தவரின் கிராமம் ஒன்றை சுற்றி வளைக்கும் போது, போர் வானூர்திகளின் துணையுடன், பாதுகாப்புப் படையினரு துணை இராணுவத்தினரும் கிராமத்தினுள் நுழைந்து மக்களைப் படுகொலை செய்தும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும் வந்தனர். இவ்வாறான போர்க்குற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததாக பன்னாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. இக்கால கட்டத்தில் உசைன் சூடானின் உட்துறை அமைச்சராகவும், சூடானிய அரசின் தார்புர் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.


தார்பூரில் 2003 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து 300,000 பேர் வரையில் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. ஆனாலும் சூடானிய அரசு 12,000 பேர் வரையிலேயே இறந்துள்ளதாகக் கூறி வருகிறது.


மூலம்

[தொகு]