செருமனியில் மணற்புயலில் சிக்கி 8 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 9, 2011

வடக்கு செருமனியில் பெரும் மணற்புயல் திடீரென நெடுஞ்சலை ஒன்றைத் தாக்கியதில் சாலையில் பயணித்த 80 இற்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இவ்விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்தனர்.

பால்ட்டிக் கடகுக்குக் கிட்டவாக உள்ள மெக்லென்பர்க்-மேற்கு பொமிரானியா மாநிலத்தில் ஏ-19 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நான்கு பாதைகளையும் நேற்று வெள்ளிக்கிழமை மணற்புயலும் தூசியும் திடீரெனத் தாக்கியது. அண்மைக்காலமாக அங்கு நிலவும் வறட்சியான காலநிலையும், கடுமையான காற்றும் சேர்ந்து நெடுஞ்ச்சலைக்கு அருகில் உள்ள வயற்காணிகளில் இருந்தே மணல் கிளம்பி வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இவ்விபத்தில் 20 வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. மொத்தம் 41 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடுமையான காயத்துக்குள்ளாயினர். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்றின் தாக்கத்தினால் பல வாகனங்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. உயிர்காப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மூலம்[தொகு]