தெற்குப் பெருங்கடலில் தென் கொரியக் கப்பல் மூழ்கியதில் குறைந்தது 5 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 13, 2010

தென் கொரியாவைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்படகு ஒன்று தெற்குப் பெருங்கடலில் மூழ்கியதில் குறைந்தது 5 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்டார்க்டிக்கா பகுதியில் தெற்குப் பெருங்கடல்

20 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் தெற்கே 2,000 கிமீ தூரத்தில் இன்று காலை உள்ளூர் நேரம் 06:30 மணிக்கு (ஜிஎம்டி 1930 ஞாயிற்றுக்கிழமை) இப்படகு மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இப்படகில் 8 தென் கொரியர்கள், 8 சீனர்கள், 11 இந்தோனீசியர்கள், 3 பிலிப்பீனோக்கள், ஒரு உருசியர் ஆகியோர் பயணித்திருந்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹாப் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேறொரு படகு 20 மாலுமிகளைக் காப்பாற்றியுள்ளனர்.


இப்படகு ஏன் மூழ்கியது என்பது தெரியவில்லை என நியூசிலாந்தின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். காலநிலை அமைதியாகவே இருந்தது எனவும், அவசர சமிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். குளிரான கடல் பகுதியில் வேறு எவரும் உயிர்தப்பியிருக்க சாத்தியமில்லை என நியூசிலாந்து அறிவித்துள்ளது.


மூலம்[தொகு]