தெற்கு சூடானை 'எதிரி நாடாக' சூடானிய நாடாளுமன்றம் அறிவித்தது
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 9 ஏப்பிரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்
- 15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு
- 25 ஏப்பிரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- 12 ஏப்பிரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்
செவ்வாய், ஏப்பிரல் 17, 2012
தெற்கு சூடானை 'எதிரி' நாடாக சூடானிய நடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.
"தெற்கு சூடானின் அரசாங்கம் எமக்கு எதிரி, சூடானின் அனைத்து அரசு நிறுவனங்களும் இதனைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப அதனை எதிரியாகப் பார்க்க வேண்டும்," என நாடாளுமன்றத் தீர்மானம் தெரிவிக்கின்றது. எக்லிக் எண்ணெய் வயல் பகுதியை கடந்த வாரம் தெற்கு சூடான் கைப்பற்றியதை அடுத்தே இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சூடானியத் தகவல்தொடர்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சூடான் அரசைக் கவிழ்க்க வேண்டும் என நாடாளுமன்ற அவைத்தலைவர் அகமது அப்ராகிம் அல்-தாகீர் தெரிவித்துள்ளார்.
சூடானிய இராணுவம் எக்லிக் நகரில் இருந்து தெற்கு சூடான் மீது தாக்குதல் நடத்தி வந்தது என தெற்கு சூடான் குற்றம் சாட்டியிருக்கிறது. இரண்டு நாடுகளும் தற்போது முழுமையான போரில் ஈடுபடுவதற்கான் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். தெற்கு சூடானின் எல்லையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை முகாம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூடானின் விமானத் தாக்குதலுக்குள்ளானது. எவரும் காயமடையவில்லை. ஆனாலும் வேறு தாக்குதல்களில் 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
தெற்கு சூடான் கடந்த ஆண்டு சூலை மாதத்தில் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. ஆனாலும், எண்ணெய் வளப் பகுதிகள், மற்றும் எல்லைகள் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே நீண்டகால சர்ச்சை இருந்து வருகிறது.
எக்லிக் நகரை எந்த விலை கொடுத்தும் மீண்டும் கைப்பற்றுவோம் என சூடான் சூளுரைத்திருக்கிறது. சூடானின் எண்ணெய்த் தேவையில் அரைவாசிப் பங்கு எக்லிக் இலிருந்து பெறப்படுகிறது. இப்பகுதி சூடானுக்குச் சொந்தமானது என ஏற்கனவே ஐநா உட்படப் பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் அதன் எல்லை வரையறுக்கப்படவில்லை.
மூலம்
[தொகு]- MPs in Khartoum brand South Sudan 'enemy' state, பிபிசி, ஏப்ரல் 16, 2012
- South Sudan dubbed 'enemy' in Khartoum, அல்-ஜசீரா, ஏப்ரல் 17, 2012