உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் மத வன்முறைகளில் எட்டு கிறித்தவர்கள் படுகொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 18, 2010

நைஜீரியாவில் ஜோஸ் என்ற நகரில் அரிவாள்களுடன் வந்த நபர்கள் தாக்கியதில் குறைந்தது எட்டு கிறித்தவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நேற்று சனிக்கிழமை அதிகாலையில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. 10 வீடுகள் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.


கொல்லப்பட்டவர்களில் கிறித்தவ மதகுரு ஒருவரின் குடும்பத்தினரும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஜோஸ் நகரில் உள்ள மசா என்ற கிராமத்தில் நூகு டவாட் என்ற கிறித்தவ மதகுருவின் மனைஇவி, இரண்டு பிள்ளைகள், மற்றும் ஒரு பேரப் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டனர். மதகுரு தாக்குதலில் உயிர் பிழைத்தார். "நான் அனைத்தையும் நீதிக்காக கடவுளிடம் சமர்ப்பிக்கிறேன்," என அவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


இவ்வன்முறை ஏனைய கிராமங்களுக்குப் பரவவில்லை என மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி கிரெகரி அன்யாட்டிங் தெரிவித்தார். "இவ்வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது குறித்து நாம் ஆரரய்ந்து வருகிறோம்."


நைஜீரியாவில் 2001, 2008, 2001 ஆம் ஆண்டுகளில் ஹவுசா இசுலாமியர்களுக்கும், பெரோம் கிறித்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மத வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் 500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


இவ்வன்முறைகள் பொதுவாக முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தாலும், அரசியல், மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளே அடிப்படைக் காரணம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கு பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் இங்கு மேலும் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]