உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வே தீவிரவாதத் தாக்குதல்: கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 25, 2012

நோர்வே நாட்டில் கடந்த ஆண்டு சூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்சு பிரெய்விக் என்ற இளைஞருக்கு நோர்வே நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


பிரெய்விக் (33) மனநலம் சரியில்லாதவர் என அரசுத்தரப்பு வாதாடியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி வென்ச் எலிசபெத் ஆர்ண்ட்சென் பிரெய்விக் தீவிரவாதி என்றும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார். குறைந்தது 10 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, அதற்கு மேலும் அவர் சமூகத்திற்கு எதிரானவராக இருந்தால் அவர் மேலும் சில காலம் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.


துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்ட பிரெய்விக் அது தொடர்பாகத் தான் வருந்தவில்லை என முன்னதாகத் தெரிவித்திருந்தார். தான் சிறந்த மனநிலையிலேயே இவற்றைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.


2011 சூலை 22 ஆம் நாள் தலைநகர் ஒசுலோவில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இவர் குண்டு வீசியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அவர் படகு ஒன்றில் ஏறி உத்தோயா தீவில் தொழிற்கட்சியின் இளைஞர் முகாம் நடந்து கொண்டிருந்த மண்டபத்திற்குச் சென்று அங்கு கூடியிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் உறவினர்களும், நண்பர்களும் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலர் இந்தத் தீர்ப்பு போதுமானதாக இல்லை எனக் கருத்துத் தெரிவித்தனர்.


நோர்வேயை இசுலாமியமயமாக்குதலில் இருந்து காக்கவே இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தார். "நான் மேலும் பலரைக் கொல்லாமுடியாமல் போனதற்கு நோர்வே, மற்றும் ஐரோப்பாவில் உள்ள தேசியவாதப் போராளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]