பாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் பலர் உயிரிழப்பு
திங்கள், நவம்பர் 1, 2010
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 11 செப்டெம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு
- 23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது
- 5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு
- 22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்
ஈராக் தலைநகர் பாக்தாதில் கிருத்தவத் தேவாலயம் ஒன்றில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க ஈராக்கிய இராணுவத்தினர் அதிரடி முயற்சியில் இறங்கியதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக உதவி உட்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் உசைன் கமால் தெரிவித்தார். இத்தாக்குதலில் ஆயுததாரிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
தேவாலயம் ஒன்றில் பிற்பகல் ஆராதனைக்காகக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 100 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள தமது அல்-கைடா சகாக்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இத்தாக்குதலை நடத்தியவர்கள் ஈராக்கியர்கள் அல்லர் எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த அரபுக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1700 மணிக்கு பெரும் குண்டுச் சத்தமும் பின்னர் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டதாக பாக்தாதின் கராடா மாவட்டத்து மக்கள் தெரிவித்தனர்.
ஈராக்கின் பங்குச் சந்தைக் கட்டடத்தை முதலில் தாக்கிய தீவிரவாதிகள் பின்னர் அருகில் இருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தினுள் நுழந்தனர் என்றும் அங்கிருந்த காவலாளிகள் சிலருடன் நடந்த மோதலில் சில காவலாளிகள் உயிரிழந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தேவாலயத்தைச் சூழ்ந்து அதிரடித் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். ஆலயத்தினுள் இடண்டு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் கிரனைட்டுகளை எறிந்ததாகவும், தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் தெரிகிறது.
6 தீவிரவாதிகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். 56 பொதுமக்கள் காயமடைந்தனர்.
ஈராக்கில் அரை மில்லியன் கிறித்தவர்கள் வசித்து வருகின்றனர். 2003 அமெரிக்கத் தாக்குதல்களை அடுத்து ஈராக்கிய கிறித்தவர்கள் பெருமளவில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
மூலம்
[தொகு]- Baghdad church hostage drama ends in bloodbath, பிபிசி, நவம்பர் 1, 2010
- Hostages die in Iraq church raid, அல்ஜசீரா, நவம்பர் 1, 2010