பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 15, 2010


தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரு இலட்சத்திற்கும் அதிகமான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், இன்று திங்கட்கிழமை மதியவேளைக்கு முன்பாக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை பிரதமர் அபிசித் விச்சசீவா உடனடியாகவே நிராகரித்தார்.


அரசாங்கம் பதவி விலகாவிட்டால் தங்களுடைய ஆர்ப்பாட்டம் தலைநகரின் மற்ற பகுதிகளுக்கு பரவும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.


நாடாளுமன்றத்தை கலைப்பது என்பது நடக்காத ஒன்று என்று அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் விச்சசீவா தெரிவித்தார். அரசுத் தலைவர் ஆர்ப்பாட்டம் நடந்த போது இராணுவத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத் தலைமையகத்தை சூழ்ந்து கொண்டு அவரை பதவி விலகும்படியும், முன்னாள் பிரதமர் தக்சினுக்கெதிரான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனவு வற்புறுத்தினர்.


ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரும், காவல்துறையினரும் தலைநகரில் குவிக்கப்பட்டிருந்தனர்.


தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், தற்போதைய அரசு சட்டப்பூர்வமான ஒன்று அல்ல என்றும், இதற்கு இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறுகின்றனர். தக்சினின் சொத்துக்களை தாய்லாந்து நீதிமன்றம் பறிமுதல் செய்ததையடுத்து அங்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]