உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெஞ்சு நடிகர் டெபார்டியேவுக்கு உருசியா குடியுரிமை வழங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 4, 2013

பிரபல பிரெஞ்சு நடிகரும் இயக்குனருமான ஜெரார் டெப்பார்டியேவுக்கு உருசியக் குடியுரிமை வழங்கும் ஆணைக்கு உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் நேற்றுக் கையெழுத்திட்டார்.


செரார் டெப்பார்டியே

டெப்பார்டியே அண்மையில் தனது பிரெஞ்சுக் குடியுரிமையைக் கைவிட்டு, பெல்ஜிய எல்லையில் உள்ள நெச்சின் நகருக்குக் குடி பெயர்ந்தார். பிரான்சின் சோசலிச அரசு 1 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக வருமானமுள்ளவர்களுக்கு 75 விழுக்காடு வரி அறவிடுவதற்கு முடிவெடுக்கவிருப்பதை அடுத்தே டெப்பார்டியே பிரான்சில் இருந்து வெளியேற முடிவெடுத்தார். உருசியாவில் தற்போது அனைவருக்கும் 13 வீத வருமான வரியே விதிக்கப்படுகிறது.


பூட்டினின் முடிவை வரவேற்றுள்ள டெப்பார்டியே, தான் உருசியாவை விரும்புவதாகவும், அது உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு எனவும் புகழ் மாலை சூட்டினார்.


64 வயதுள்ள டெப்பார்டியே 70 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் பல பன்னாட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு இவர் உருசிய-பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு ஒன்றில் உருசியாவின் இரண்டாம் நிக்கலாஸ் பேரரசன் தனது ஒரே மகனைக் குணப்படுத்துவதற்காகப் பணிக்கமர்த்திய சர்ச்சைக்குரிய கிரிகோரி ரஸ்புட்டீனின் பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தமது நாட்டை விட்டு வெளியேற டெப்பார்டே முடிவெடுத்ததைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சுப் பிரதமர், ”டெப்பார்டேயின் முடிவு அருவருக்கத்தக்கது," எனக் கூறினார்.


பிரெஞ்சு சட்ட விதிகளின் படி, இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் நாடற்றவராக இருப்பது சட்டவிரோதமாகும். தமது நாட்டின் குடியுரிமையை நிராகரிக்க முன்னர் அவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.


மூலம்

[தொகு]