உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் அமோக ஆதரவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 1, 2012

சோமாலியாவில் இம்மாதம் தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய அரசை அமைப்பதற்கான அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.


அரசியல் தலைவர்களின் இன்றைய கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு முன்பாக இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளன. தற்கொலைக் குண்டுதாரிகள் தவிர வேறு எவரும் இச்சம்பவத்தில் உயிரிழக்கவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


கூட்டத்தில் சமூகமளித்திருந்த 645 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 621 பேர் அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். 13 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இந்த ஆவணம் இடைக்கால நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் புதிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும். இக்குழு ஆகத்து 20 ஆம் நாள் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.


கடந்த இரண்டு தசாப்தங்களாக சோமாலியாவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது. அல்-கைதா அமைப்புடன் தொடர்புடைய போராளிகள் நாட்டின் பெரும் பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். சோமாலியாவின் கடைசி அரசு 1991 ஆம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டது.


சோமாலியாவுக்கு வழங்கப்படும் பன்னாட்டு உதவிகளில் 70 விழுக்காட்டுக்கு கணக்குக் காட்டப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனாலும் இடைக்கால அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளது.


அண்மைக்காலத்தில் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரும், ஐக்கிய நாடுகளின் பின்புலத்தில் இயங்கும் இடைக்கால அரசுப் படையினரும் இணைந்து நடத்திய தாக்குதல்களை அடுத்து தலைநகர் மொகதிசுவில் இருந்து அல்-சபாப் போராளிகள் வெளியேறினர். ஆனாலும் ஆங்காங்கே அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அல்-சபாப் போராளிகள் சோமாலியாவின் தெற்கு மற்றும் நடுப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]