புலப்படாத சிறுவர்களின் 'கோனி 2012' பரப்புரைக்கு பன்னாட்டு நீதிமன்ற வழக்குத்தொடுநர் ஆதரவு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, மார்ச் 10, 2012

உகாண்டாவின் போர்க்குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜோசப் கோனி என்பவரைக் கைது செய்யுமாறு புலப்படாத சிறுவர்கள் என்ற அமைப்பு விடுத்துள்ள கோரிக்கைக்குத் தாம் ஆதரவு தருவதாக பன்னாட்டுக் குற்றவியல் தீமன்றின் வழக்குத் தொடுநர் லூயி மெரொனோ ஒக்காம்போ கூறியுள்ளார்.


எல்.ஆர்.ஏ அமைப்பினரால் கடத்திச் செல்லப்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சிறுவர்கள் இரவு நேரங்களில் இவ்வாறு முகாம்களில் தங்குகின்றனர்.

அமெரிக்காவின் புலப்படாத சிறுவர்கள் என்ற அமைப்பு ஜோசப் கோனியின் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தினர் (எல்.ஆர்.ஏ) சிறுவர்களைப் படை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதை வெளிப்படுத்து அரை மணி நேர காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இக்காணொளி யூடியூப் மூலம் இதுவரை 20 மில்லியன்கள் வரையில் பார்க்கப்பட்டிருக்கிறது.


ஆனாலும், இந்தப் பரப்புரையின் உள்ளடக்கமும், நம்பகத்தன்மையும் விமரிசகர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. புலப்படாத சிறுவர்கள் (Invisible Children) என்ற அமைப்பு தாம் சேகரித்த நிதியை திரைப்படம் தயாரிக்கவும், வெளிநாட்டுப் பயணத்திற்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும் செலவழித்து வருகின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


உகாண்டாவின் உள்ளூர் ஊடகவியலாளர்களும், ஆர்வலர்களும் இந்தப் பரப்புரையை ஆதிரித்துள்ள போதும், களத்தின் உண்மை நிலையை இப்பரப்புரை எடுத்துக் கூறப்படவில்லை என விமரிசகர்கள் கருதுகின்றனர்.


ஜோசப் கோனியும் அவரது சகாக்களும் ஐசிசி எனப்படும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் 2005 ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருபவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜோசப் கோனியின் எல்.ஆர்.ஏ அமைப்பு 1987 ஆம் ஆண்டில் அச்சோலி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் அவர்களுக்குத் தனிநாடு அமைக்கவும் தீவிரவாத அமைப்பாகத் தோற்றம் பெற்றது. இவ்வமைப்பு தற்போது அயல் நாடுகளிலேயே தீவிரமாக இயங்கி வருகிறது.


மூலம்[தொகு]