புலிகள் முத்திரை விவகாரத்தில் சர்வதேச தபால் ஒன்றிய விதிகளை புறக்கணிக்க இலங்கை தீர்மானம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சனவரி 10, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான படங்கள், சின்னங்கள் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் ஒட்டிய கடிதங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் போது, பன்னாட்டு தபால் ஒன்றியத்தின் சில விதிகளைப் புறக்கணித்துச் செயற்படுவதற்கு இலங்கை தபால் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அவ்வாறான அஞ்சதலைகளுடன் இலங்கைக்கு கடிதங்கள் வந்து சேர்ந்தால், அந்த அஞ்சல்தலைகளை நீக்கிவிட்டே கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்று இலங்கைத் தபால்துறை அறிவித்துள்ளது.


சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரெஞ்சு தபால்துறைக்கு தான் கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் தாங்கிய ஒரு அஞ்சற்தலையுடன், விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட படங்களைத் தாங்கிய நான்கு அஞ்சல் தலைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முத்திரைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவம், தமீழீழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலரான கார்த்திகைப்பூ மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் பிரான்சின் தபால் துறையின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இம்முத்திரை வெளியீடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏற்கெனவே பிரெஞ்சு தூதரகத்திடம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகளை கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன. இறைமையுள்ள நாடு என்ற ரீதியில், எந்தவொரு சர்வதேச சட்ட ஒழுங்குவிதியையும் புறந்தள்ளிவிட்டு இறைமைக்கு ஏற்றவகையில் தான் செயற்பட வேண்டுமென்பது அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தபால் திணைக்களம் செயற்படுவதாகவும் தபால் மாஅதிபர் கூறினார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Bookmark-new.svg