பெருவின் கம்யூனிசப் போராளிக் குழுத் தலைவருக்கு ஆயுள் தண்டனை
- 28 சூன் 2013: பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது
- 8 சூன் 2013: பெருவின் கம்யூனிசப் போராளிக் குழுத் தலைவருக்கு ஆயுள் தண்டனை
- 2 மே 2013: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- 13 நவம்பர் 2012: மச்சு பிக்ச்சு தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது
- 11 ஏப்பிரல் 2012: பெருவில் சுரங்கத்தினுள் அகப்பட்ட 9 தொழிலாளர்கள் ஒரு வாரத்தின் பின்னர் மீட்பு
சனி, சூன் 8, 2013
பெரு நாட்டின் ஒளிர்தடவழி (Shining Path) என்ற முன்னைநாள் கம்யூனிசப் போராளிக் குழுவின் கடைசித் தலைவர் எனக் கருதப்படும் தோழர் ஆர்ட்டேமியோ என்பவருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
52 வயதான புளோரின்டோ புளோரெசு எனும் தோழர் ஆர்ட்டேமியோ பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத நாணயமாற்று ஆகிய குற்றங்களுக்காக தலைநகர் லீமாவில் உள்ள நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளியாகக் கண்டிருக்கின்றனர். ஆயுள்தண்டனையுடன் $183 மில்லியன் அபராதமு விதிக்கப்பட்டது.
980களிலும் 90களின் ஆரம்பத்திலும் மிகப் பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமாக இருந்தது இந்த ஒளிர்தட வழி இயக்கம். சுமார் 70,000 பேர் வரையில் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். தமது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தாம் தயார் என ஆர்ட்டேமியோ கடந்த ஆண்டு திசம்பரில் அறிவித்திருந்தார். ஆனாலும், அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டார். இக்குழு பின்னர் பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தலிலேயே ஈடுபட்டு வருகிறது.
தீர்ப்பு வழங்கிய பின்னர் நீதிபதி தெரிவித்ததாவது: "பொதுமக்கள், காவல்துறையினர், மற்றும் இராணுவத்தினரைப் படுகொலை செய்ய ஆர்ட்டேமியோ உத்தரவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது". ”ஒளிர்தடவழியின் மத்திய குழுவில் இவர் இருந்துள்ளார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”
கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஆல்ல்ட்டோ உவால்லாகா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஆர்ட்டேமியோ கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணைகளில் இவர் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளார். ஆனாலும், அவர் தன்னை ஒரு புரட்சிக்காரன் எனக் கூறி வந்தார்.
பெருவின் பூர்சுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது.
மூலம்
[தொகு]- Peru's Shining Path leader jailed for life for terrorism, பிபிசி, சூன் 8, 2013
- Peru rebel leader 'Artemio' gets life in prison, டைக்கோ டைம்ஸ், சூன் 8, 2013